Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 26 ஜூலை (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், சூரக்குடி வடக்கன் வளவில் வசித்து வந்த பூச்சியம்மாள் (70) தனது கணவர் மாதவன் உடன் வசித்து வந்தார்.
தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, சென்னையில் வசித்து வருவதால், வயதான தம்பதியினர் மட்டும் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பூச்சியம்மாள் உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை சூரக்குடி மஞ்சுவிரட்டு திடல்–காளாப்பூர் சாலை ஓரத்தில் உள்ள வேப்ப மரத்தடியில், பெரியார் நீட்டிப்பு கால்வாயில் வேப்பமுத்து சேகரிக்க வந்த பெண்மணி ஒருவர், பூச்சியம்மாள் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கிராம மக்களுக்கும், சதுர்வேதமங்கலம் (எஸ்.வி.மங்கலம்) காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தை திருப்பத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தடயங்களை சேகரிக்கும் பணிக்காக மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பூச்சியம்மாளின் மரணம் விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து சதுர்வேதமங்கலம் போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam