சிவகாசி அருகே அடுத்தடுத்து இரண்டு பட்டாசு விபத்துகள் - சட்டவிரோத குடோனில் வெடி விபத்து
சிவகாசி, 26 ஜூலை (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டு பட்டாசு விபத்துகள் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. முதலாவது சம்பவமாக, சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமா
பட்டாசு


சிவகாசி, 26 ஜூலை (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டு பட்டாசு விபத்துகள் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

முதலாவது சம்பவமாக, சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர ஷெட் அமைத்து பட்டாசு தயாரித்து வந்த குடோனில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒருவர் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற தகவலைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பேத்நாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய் விநாயகா கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலையிலும் தீ விபத்து ஏற்பட்டது.

ஆலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித அட்டைப் பெட்டிகளில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரே நாளில், சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குடோனில் வெடி விபத்தும், உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் தீ விபத்தும் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam