ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு - ஜூலை 30 ஆம் தேதி விசாரணை
சென்னை 26 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்த நிலையில், இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு தவெக உடன
ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு


சென்னை 26 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்த நிலையில், இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது.

அதிமுகவின் தோல்விக்கு தவெக உடன் கூட்டணி வைக்காதது தான் காரணம் என்று நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள். அத்துடன் திமுக உடன் சேர்ந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக கூறி, அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் விலகி வருகிறார்கள்.

அதிமுகவில் தேர்வான 6 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் சேர்ந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்கள். இந்த சூழலில் அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் விசாரிக்க சபாநாயகர் பிரபாகர் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக சட்டமன்ற செயளாளர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாங்கள் 13.5.2026-ஆம் நாளன்று அளித்த தகுதிநீக்க மனு தொடர்பாக, நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த பதில்கள் மீது கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால், 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளில் விதி 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் அவர்கள் 3.7.2026 அன்று முனைவர் இசக்கி சுப்பையா அவர்களையும் 9.7.2026 அன்று திருமதி சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் கே. மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் கோரினார்கள்.

அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பார்வையில் காணும் இச்செயலக கடிதங்கள் மற்றும் தங்களின் கடிதங்களைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து மேலும் சில விளக்கங்களை கோர விரும்புவதால், கீழ்க்காணும் அட்டவணையின்படி பேரவைத் தலைவர் அவர்கள் அறையில் மேற்காணும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

எனவே, அச்சமயத்தில் அவர்கள் விளக்கம் அளிக்கையில், தாங்களும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் விசாரணை நடைபெறவுள்ளது. அவர்களிடம் ஏற்கனவே 3 முறை விசாரித்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததை ஏற்க இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் விசாரணை நடத்த சபாநாயகர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்திய பாமா ஆகியோருக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b