Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டதாகக் கூறப்படும் சுற்றறிக்கையை திரும்பப் பெற்று தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படி நிகழ்ச்சி நடைபெறும் என துணைவேந்தர் என். சந்திரசேகர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே அந்தப் பாடலை மூன்றாவது இடத்தில் பாடச் செய்வது தமிழுக்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாநில ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், பின்னர் மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகக் கூறி, இதுவே தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் மாநில உரிமைகளை மதிக்காமல் அதிகார அத்துமீறலில் மத்திய அரசு ஈடுபடுவதாகவும், ஆளுநரை முன்னிறுத்தி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ய முயல்வதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது பின்பற்றப்படும் நடைமுறையைப் போலவே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இனிவரும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து புறக்கணித்தால் அதற்கு மக்கள் உரிய பதிலடி அளிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam