Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 26 ஜூலை (ஹி.ச)
தேனி மாவட்டத்தில் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக மலை கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மேகமலை, வருசநாடு மற்றும் கண்டமனூர் வனச்சரக அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள வருசநாடு மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை, ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேகமலை, வருசநாடு மற்றும் கண்டமனூர் வனச்சரக அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வனச்சரக அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக வனத்துறை அலுவலகங்கள் மற்றும் பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam