Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், Highways ஹீரோ என்று தம்பட்டம் அடிக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலைகளையா கட்டமைக்கிறார், அல்லது மக்களின் பணத்தை பறிக்கும் சுங்கக் கொள்ளை வழியையா உருவாக்குகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் மொத்த விலை குறியீட்டு (WPI) கணக்கீட்டு முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக, கடந்த 4 மாதங்களில் மூன்றாவது முறையாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 80 சுங்கச் சாவடிகள் மூலம் ஆண்டுதோறும் ₹4,200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிலும் திருப்தியடையாமல் லாரிகளுக்கான கட்டணத்தை ₹30 வரை உயர்த்தி, தமிழக மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்தார்.
லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பொருளாதார நிலையையும் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர், இந்த சுங்கக் கட்டண உயர்வை சுங்கக் கொள்ளை என்று குறிப்பிட்டு, அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam