குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி , 26 ஜூலை (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


கிருஷ்ணகிரி , 26 ஜூலை (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், இன்று காலை காலிக் குடங்களுடன் ஒன்று திரண்டு ஊத்தங்கரை - திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் சில மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Hindusthan Samachar / vidya.b