Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 ஜூலை (ஹி.ச)
விழுப்புரம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு இரண்டு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் பிரகாஷ் என்ற இளைஞர் கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓடிய நான்கு பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரகாஷின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷை வெட்டிவிட்டு தப்பியோடிய பரத், கோகுல், அபிஷேக், மற்றும் விஷ்ணு ஆகிய நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b