சாலை விபத்தில் 21 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதி
ஈரோடு, 26 ஜூலை (ஹி.ச) ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நேற்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியதில், வேனில் இருந்தவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்தவர்கள் உட்பட 21 பேர் படுகாயம
சாலை விபத்தில்  21 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதி


ஈரோடு, 26 ஜூலை (ஹி.ச)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நேற்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியதில், வேனில் இருந்தவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்தவர்கள் உட்பட 21 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

காயமடைந்த 21 பேருக்கு சிகிச்சை அளிக்க அந்தியூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை.

இதனால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை ஒரே படுக்கையில் மூன்று பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

வலியால் துடித்த நோயாளிகள் படுக்கைக்காக காத்திருந்த காட்சி பார்ப்பவர்களின் மனதை பதற வைத்தது.

அரசு மருத்துவமனையின் இந்த மோசமான நிலை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய முதலுதவி கூட அளிக்க முடியாத நிலையில் அரசு மருத்துவமனை இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b