தூத்துக்குடியில் பைபர் படகில் கடலுக்கு சென்ற 2 சிறுவர்கள் உயிரிழப்பு - சடலமாக மீட்பு
தூத்துக்குடி, 27 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர் என்பவரின் மகன் ஜோஸ்வா, மனோஜ் உள்ளிட்ட 7 சிறுவர்கள் நேற்று பிற்பகலில் ஒரு பைபர் படகில் கடலை சுற்றி பார்க்க திட்டமிட்டு பைபர் படகில் உல்லாசமாக ச
தூத்துக்குடியில் பைபர் படகில் கடலுக்கு சென்ற 2 சிறுவர்கள் உயிரிழப்பு - சடலமாக மீட்பு


தூத்துக்குடி, 27 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர் என்பவரின் மகன் ஜோஸ்வா, மனோஜ் உள்ளிட்ட 7 சிறுவர்கள் நேற்று பிற்பகலில் ஒரு பைபர் படகில் கடலை சுற்றி பார்க்க திட்டமிட்டு பைபர் படகில் உல்லாசமாக சென்றுள்ளனர்.

அவர்கள் நடுக்கடலுக்கு சென்றபோது, திடீரென பைபர் படகு பழுதாகி நடுக்கடலில் நின்றுள்ளது. இதனால் பதற்றமடைந்த சிறுவர்கள் கரைக்கு திரும்ப முயற்சித்துள்ளனர்.

அப்போது அந்த 7 சிறுவர்களில் 4 பேர் கடலில் குதித்து நீந்தி வெளியே சென்று ஊர்மக்களை அழைத்து வந்து மற்றவர்களை மீட்க திட்டமிட்டிருந்தனர்.

அந்த வகையில் முதலில் இரண்டு பேரும் அடுத்து 2 பேரும் கடலில் குதித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் கடலில் மூழ்கியதை அறிந்த மற்ற 3 பேரில் ஒருவர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கரையில் இருந்த சிறுவர்களின் தந்தை வேறொரு பைபர் படகை எடுத்துக் கொண்டு வேகமாக வந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இருவரை மீட்டார்.

இதையடுத்து மற்ற இருவரை மீட்கும் முயற்சியின் போது அவர்கள் மூழ்கினர். இதனால் படகில் இருந்த மூவரையும் அந்த படகுடன் கொண்டு வந்து கரை சேர்த்தார்.

பின்னர் அவர் திரும்பி வந்து கடலில் மூழ்கிய சிறுவர்களை நேற்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தேடி பார்த்தனர். இதையடுத்து அந்த பகுதி இருண்டு விட்டதால் அந்த சிறுவர்களை கண்டுபிடிக்க முடியாமல் கரை திரும்பிவிட்டார்.

இதையடுத்து இன்று காலை 4 மணிக்கு அந்த இரு சிறுவர்களையும் தேடும் பணியை 8 பைபர் படகுகளில் சென்ற மீனவர்கள் தொடங்கினர். இதில் காலை 7 மணிக்கு இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தருவைக்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலை சுற்றி பார்க்க 7 சிறுவர்கள் சென்ற நிலையில் அதில் 2 பேர் கடலில் நீந்தி வர முயற்சித்து கரை திரும்ப முடியாமல் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b