Enter your Email Address to subscribe to our newsletters

நகரி , 27 ஜூலை (ஹி.ச.)
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ரோஜாவுக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஆந்திரஜோதி நாளிதழின் பிரதிகளை எரித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருப்பதி ஈஸ்ட் போலீசார் சித்தூர் மாவட்டம் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டுக்கு சென்று நோட்டீசை வழங்கினர். அதில், வரும் 30-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அவமதிக்கும் வகையில் ஆந்திரஜோதி நாளிதழில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டி ரோஜா போராட்டம் நடத்தினார்.
அப்போது அந்த நாளிதழின் பிரதிகள் எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக ரோஜாவுக்கு தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரோஜா கூறுகையில், தன் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மாநிலத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு பதிலாக ‘ரெட் புக் அரசியல்’ நடைபெறுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்ததற்காக வழக்குப்பதிவு செய்வது சரியல்ல என்றும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரோஜா தெரிவித்தார்.
இதுபோன்ற வழக்குகளுக்கு பயப்படாமல் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA