Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு, டாஸ்மாக் கொள்கை மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்து, முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
த.வெ.க தொடங்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டதாக விஜய் தொடர்ந்து பேசி வந்தார்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகக் கூறிய அரசு, தற்போது 54 புதிய ரக மதுபானங்களை அறிமுகப்படுத்தியதுடன், டாஸ்மாக் கடைகளின் அருகே பார்கள் திறக்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தமிழக இளைஞர்களை 24 மணி நேரமும் மதுவுக்கு அடிமையாக்கும் செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முந்தைய திமுக ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்த 'ரேவ் பார்ட்டிகள்' மீண்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 'General G' என்ற வாட்ஸ்அப் குழு மூலம் இளம் ஆண்களும், பெண்களும் விடிய விடிய வெளிநாட்டு போதைப்பொருட்களை பயன்படுத்தும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது பெற்றோர்களையும் தமிழ் சமூகத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 34 ஆண்டுகளாக திரைப்படங்களில் மது அருந்தும் மற்றும் புகைபிடிக்கும் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் அந்த பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளனர். உங்கள் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான சுவடுகள் இருந்தன என்றும் முதல்வர் விஜயை விமர்சித்துள்ளார்.
மேலும், கேரள உள்துறை அமைச்சர் உங்களைச் சந்தித்தபோது, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி. சிறப்பு பிரிவு, க்யூ பிராஞ்ச், சிறப்பு பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW), போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு (NIB) உள்ளிட்ட காவல்துறை பிரிவுகளுக்கு தெரியாமல் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யவும், சிறைகளுக்குள் பயன்படுத்தவும் முடியாது என ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஆதங்கப்படுவதாக அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இந்த சீரழிவுகள் உங்களுக்கு தெரிந்தே நடக்கிறதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா? என முதல்வர் விஜயை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ