ஆரணி அருகே 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த பாலியல் வன்கொடுமை - ஆசிரியையின் விழிப்புணர்வால் போக்சோவில் கைது
திருவண்ணாமலை, 27 ஜூலை (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 23ஆம் தேதி, 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் ''குட் டச், பேட் டச்'' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, யாரேனும் தவறாக நடந்து கொண்டால்
கைது


திருவண்ணாமலை, 27 ஜூலை (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம்

ஆரணியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 23ஆம் தேதி, 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் 'குட் டச், பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது, யாரேனும் தவறாக நடந்து கொண்டால் அச்சமின்றி பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், 2021ஆம் ஆண்டு 3-ஆம் வகுப்பில் படித்தபோது, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை யாரிடமும் கூறினால் தாக்கிவிடுவேன் என மிரட்டியதால் இதுவரை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் ஆசிரியையிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை, மாணவியின் தாயிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, அவரது அறிவுறுத்தலின்படி மாணவியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆரணி டவுன் முனுசாமி தெருவைச் சேர்ந்த 42 வயதான ஒருவரை அடையாளம் கண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், அவர் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியால், பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் கைது செய்யப்பட்டிருப்பது ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam