பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு - சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை
திண்டுக்கல், 27 ஜூலை (ஹி.ச) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் ஆண்டவன் பூங்கா சாலையில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், தற்போது
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு - சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை


திண்டுக்கல், 27 ஜூலை (ஹி.ச)

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் ஆண்டவன் பூங்கா சாலையில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், தற்போது பழனி கோயிலின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி போலி ஆவணங்கள் தயாரித்து வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ், அதனை வாங்கிய வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய நான்கு பேர் மீது அடிவாரம் காவல் நிலையத்தில் கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பல கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்கு என்பதால் தமிழக காவல்துறை தலைமையகம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மாவட்ட பதிவாளர் சசிகலா ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை சிபிசிஐடி வசம் சென்ற பிறகு அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து திண்டுக்கல், பழனி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் சார் பதிவாளர் மற்றும் நிலத்தை வாங்கியவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். முன்ஜாமீன் கோரி ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனை அழைத்து வந்து அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரப்பதிவின் போது நடந்த முறைகேடுகள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார், இதன் பின்னணியில் அரசியல் மற்றும் விஐபிக்கள் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b