Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
சென்னை மணலி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் பகுதிகளைச் சேர்ந்த, ஒரே வயதுடைய இரண்டு 17 வயது சிறுமிகள் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், உடல்கள் மாற்றி வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அனுஷ்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மணலியைச் சேர்ந்த பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருவரின் உடல்களுக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு, வழக்குகளுக்கான டோக்கன் எண்ணின் அடிப்படையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அப்போது உடற்கூறு (Post Mortem) எண்கள் மாற்றி பதிவு செய்யப்பட்டிருந்ததால், பிரியதர்ஷினியின் உடல் என நினைத்து அனுஷ்காவின் உடல் தவறுதலாக மணலிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அனுஷ்காவின் உடலை பெற வந்த உறவினர்கள் வழங்கப்பட்ட உடல் அவருடையது அல்ல என்று தெரிவித்ததால் மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் சரிபார்த்தது. அதே நேரத்தில் மணலியில் உடலை பார்த்த பிரியதர்ஷினியின் உறவினர்களும் அது அவருடைய உடல் இல்லை என்பதை கண்டறிந்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மணலிக்கு அனுப்பப்பட்ட அனுஷ்காவின் உடல் மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், இரு சிறுமிகளின் உடல்களும் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்ட இரண்டு சிறுமிகளின் உடல்கள், உடற்கூறு எண்கள் மாற்றப்பட்டதாலா அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தாலா தவறாக ஒப்படைக்கப்பட்டன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam