தருமபுரி ரயில் நிலையத்தில் பேசஞ்சர் ரயிலில் தீப்பிடிப்பு - ரயில்வே ஊழியர்கள் விரைந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
தர்மபுரி, 27 ஜூலை (ஹி.ச.) பெங்களூரு யஸ்வந்த்பூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரயிலில் தருமபுரி ரயில் நிலையத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் விரை
ரயில்


தர்மபுரி, 27 ஜூலை (ஹி.ச.)

பெங்களூரு யஸ்வந்த்பூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரயிலில் தருமபுரி ரயில் நிலையத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு–சேலம் பயணிகள் ரயில் நேற்று இரவு தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு வந்தபோது, ரயிலின் ஐந்தாவது பெட்டியின் கீழ்பகுதியில் உள்ள சஸ்பென்ஷன் ஸ்பிரிங்கில் திடீரென தீப்பிடித்தது.

இதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இணைந்து தீயை விரைவாக அணைத்தனர்.

தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 47 நிமிடங்கள் தாமதமாக அந்த பயணிகள் ரயில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டது.

ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனடியாக அணைத்ததால் பெரிய சேதமும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், திடீர் தீப்பிடிப்பு காரணமாக பயணிகளிடையே சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam