குடிநீர் தட்டுப்பாடு - தமிழக அரசை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு, 27 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர
Nainar Nagenthran


தமிழ்நாடு, 27 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,

தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளவில்லை என்றும், குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மாநில நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 90 முக்கிய அணைகளில் 59 அணைகள் வறண்டுவிட்டதாகவும், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பல மாவட்டங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறையிடம் நிதி கோர அதிகாரிகள் தயங்கும் நிலை நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல் உள்ளிட்ட அவசரப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும், வறட்சி நிலையை கருத்தில் கொண்டு ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்வழித் தடங்களை தூர்வாரி சீரமைத்து, எதிர்காலத்தில் மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P