பல்லடத்தில் பண்ணைக் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.10 சரிவு - ரூ.117 ஆக நிர்ணயம்
திருப்பூர், 27 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தின் கறிக்கோழி விலை நிர்ணயத்தில் மையமாக விளங்கும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்பட்டு வரும் பிராய்லர் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினர் தினந்தோறும் சந்தை நிலவரம், நுகர்வு மற்றும் விற்பனை சூழலுக்கு ஏற
Farm-gate procurement price of broiler chicken


திருப்பூர், 27 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தின் கறிக்கோழி விலை நிர்ணயத்தில் மையமாக விளங்கும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்பட்டு வரும் பிராய்லர் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினர் தினந்தோறும் சந்தை நிலவரம், நுகர்வு மற்றும் விற்பனை சூழலுக்கு ஏற்ப கொள்முதல் விலையை நிர்ணயித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், பண்ணைக் கறிக்கோழியின் கொள்முதல் விலையை கிலோவுக்கு 10 ரூபாய் குறைத்து அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று வரை கிலோ 127 ரூபாயாக இருந்த உயிருள்ள பண்ணைக் கறிக்கோழியின் கொள்முதல் விலை, இன்று முதல் 117 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே கறிக்கோழி நுகர்வில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் சந்தையில் காணப்படும் மந்தநிலை காரணமாகவே இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக புரட்டாசி மாதம் தொடங்க இன்னும் ஒரு மாதம் நிலையில், வழக்கமாகவே அசைவ உணவு நுகர்வு குறையும் என்பதால் முன்கூட்டியே உற்பத்தியாளர்கள் விலையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்த கொள்முதல் விலை குறைப்பு காரணமாக, பொதுமக்களுக்கு சில்லறை விற்பனைக் கடைகளில் கறிக்கோழி இறைச்சியின் விலை கிலோவுக்கு 10 முதல் 15 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்திக்கு சுமார் 100 ரூபாய் வரை செலவாகும் நிலையில், தற்போதைய விலை சரிவு உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறைவானதாகவே இருக்கும் என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b