காஞ்சிபுரம் அருகே தொடர் மின்வெட்டு - அதிருப்தியில் பொதுமக்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம், 27 ஜூலை (ஹி.ச.) காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செவிலிமேடு பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர், அம்பேத்கர் நகர், பிருந்தாவனம் நகர் மற்றும் வடிவேல் நகர் உள்ளிட
காஞ்சிபுரம் அருகே தொடர் மின்வெட்டு - அதிருப்தியில் பொதுமக்கள் சாலை மறியல்


காஞ்சிபுரம், 27 ஜூலை (ஹி.ச.)

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

செவிலிமேடு பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர், அம்பேத்கர் நகர், பிருந்தாவனம் நகர் மற்றும் வடிவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், மின்விசிறி கூட இன்றி குழந்தைகள், முதியவர்கள் வீடுகளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிறு தொழில்கள், வணிக நிறுவனங்கள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனை கண்டித்து, செவிலிமேடு பகுதியில் திரண்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், மின்தடை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், மின்வாரிய அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக மின் விநியோகம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b