Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
மைசூரில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து கொண்டிருந்த மைசூரு - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயிலில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஒய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர் டி.சேகர் என்பவர் பயணம் செய்துள்ளார்.
இப்பயணத்தின் போது ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட காலை உணவை அவர் சாப்பிட முற்பட்டபோது, அந்த உணவுப் பொட்டலத்திற்குள் சிறிய பசை டப்பா ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து சக பயணிகளிடமும், ரயிலில் பணியில் இருந்த உணவு வழங்கும் ஊழியர்களிடமும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
பிரீமியம் ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயிலிலேயே உணவின் தரம் இவ்வளவு மோசமாக இருப்பதா என்று சக பயணிகளும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஐஆர்சிடிசி அதிகாரிகள் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
உணவு வழங்கும் ஒப்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b