டாஸ்மாக் பார்கள் விரிவாக்கம் குறித்த அரசின் புதிய அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை, 27 ஜூலை (ஹி.ச) டாஸ்மாக் மதுபானக் கடைகளிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் எங்கும் டாஸ்மாக் பார்கள் (குடிப்பகங்கள்) அமைக்க அனுமதிக்கும் தமிழக அரசின் புதிய அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட
Jawahirulla


Jh


சென்னை, 27 ஜூலை (ஹி.ச)

டாஸ்மாக் மதுபானக் கடைகளிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் எங்கும் டாஸ்மாக் பார்கள் (குடிப்பகங்கள்) அமைக்க அனுமதிக்கும் தமிழக அரசின் புதிய அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தலின்போது மதுவின் சமூகத் தீமைகளைக் குறைத்து, மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்போம் என்று உறுதியளித்த அரசு, தற்போது மதுபான விற்பனையை மேலும் எளிதாக்கும் வகையில் குடிப்பகங்களை விரிவுபடுத்துவது தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சில ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்தை குறைத்து, டெண்டர் முறையில் அதிகமானோர் பங்கேற்கச் செய்வதே இந்த முடிவின் நோக்கம் என்று அரசு கூறினாலும், அரசின் கடமை ஒப்பந்ததாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்ல; மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நாளொன்றுக்கு சுமார் ₹150 கோடி வருவாய் கிடைப்பதாக அரசு கூறினாலும், அதன் பின்னணியில் குடும்ப வன்முறை, இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவு, சாலை விபத்துகள், உடல்நலப் பாதிப்புகள் உள்ளிட்ட சமூகத் தீமைகள் இருப்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிப்பகங்களுக்கான குறைந்தபட்ச பரப்பளவை 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தியிருப்பது மட்டும் போதுமானதல்ல என்றும், அவசரகாலங்களில் பாதுகாப்பாக வெளியேறும் வசதிகள் குறித்த கவலைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, டாஸ்மாக் பார்களை 100 மீட்டர் சுற்றளவிற்குள் அமைக்க அனுமதிக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற்று, மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கும் நீண்டகாலத் திட்டங்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, மறுவாழ்வு மையங்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் சமூக நலக் கொள்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ