Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 27 ஜூலை (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகை - கல்லட்டி மலைப்பாதையில் பாதுகாப்பை உறுதி செய்து விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை முதல் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையில் நீலகிரி மாவட்டப் பதிவு எண் (TN-43) கொண்ட வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக, மைசூரில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு வரும் வாகனங்கள் தெப்பக்காடு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, கூடலூர் நெடுஞ்சாலை வழியாக உதகைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதற்காக போலீசார் தெப்பக்காடு பகுதியில் சிறப்பு சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம் மசினகுடியில் இருந்து மாயார் மற்றும் சிங்காரா செல்லும் சாலையில் வெளிமாவட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லட்டி–மசினகுடி சாலையிலும் முழுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால் மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 1,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam