Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
சென்னை கோயம்பேட்டில் உள்ள பாடிக்குப்பம் பகுதியில், கூவம் ஆற்றை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், நேரடியாக கூவம் ஆற்றில் இறங்கி நடைபெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்தார்.
பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தூர்வாரும் பணி, ஆகாயத்தாமரையை அடியோடு அகற்றுதல், ஆற்றின் இருபுறங்களிலும் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கூவம் ஏரியில் தொடங்கி சுமார் 71 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து மெரினா கடற்கரையில் கலக்கும் கூவம் ஆறு, ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆகாயத்தாமரை படர்ந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் நீரோட்டம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் வகையில், திருவேற்காட்டில் இருந்து கோயம்பேடு, அமைந்தகரை, சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக சுமார் 21 கிலோமீட்டர் நீளத்திற்கு, எக்ஸ்னோரா (Exnora) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நீர்வளத்துறை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சுமார் ₹40 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அடுத்த சில மாதங்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்கிறாரா? என்று கேள்வி எழுப்பியபோது,
அதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் என். ஆனந்த் அமைதியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ