அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
மயிலாடுதுறை, 27 ஜூலை (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தலைச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது உள்ளூரில் வசித்து வந்த இவரது மனைவி அனிதா என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு மயிலாடுதுற
Mayiladuthurai


மயிலாடுதுறை, 27 ஜூலை (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தலைச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது உள்ளூரில் வசித்து வந்த இவரது மனைவி அனிதா என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்ததாக தெரிவித்த கிரிஜா என்ற பெண்ணிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்து அதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து கிரிஜா , Direct recruitment Board மூலம் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக இட்டு, போலியான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். மனைவிக்கு வேலை கிடைத்ததால், வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தனது மூன்று பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று, சுரேஷ் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி சேர வந்த பொழுது, போலியான பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. மோசடி செய்த கிரிஜா இது போல் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி நியமன பணி ஆணைகளை வழங்கியது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை 2025 ஆம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்பொழுது ஜாமினில் வெளியே உள்ள நிலையில், கொடுத்த பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை மனு செய்தும் நடவடிக்கை இல்லை.

கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து மீண்டும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக மயிலாடுதுறை அடுத்த மாப்படுகையை சார்ந்த சிவக்குமார் என்பவரிடம் நான்கரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

சிவக்குமார் வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தன்னை ஏமாற்றியது தெரியவர, காவல்துறை சைபர் கிரைம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஆகியவற்றில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சுரேஷ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாசலில் பெட்ரோலை, ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவர் கையில் இருந்த பெட்ரோலை பிடுங்கி அவரை காப்பாற்றினர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / ANANDHAN