வேளாண் தனி நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டம் -  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அமைச்சர் வினோத்
சென்னை, 27 ஜூலை (ஹி.ச.) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர
Vinot


சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், கைத்தறித்துறை அமைச்சர் விஜயபாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், விவசாயிகள் சங்கங்கள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத் விஜய், இதுவரை 4 மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, சென்னை தவிர மற்ற 38 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நீர்ப்பாசனம், இயற்கை வேளாண்மை, பயிர் காப்பீடு, சந்தை வசதிகள், மண்வள மேம்பாடு, நீர் மேலாண்மை, வேளாண்மையில் இளைஞர்களின் பங்களிப்பு, கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு இந்த ஆண்டின் வேளாண் தனி நிதிநிலை அறிக்கையில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

மேலும், காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குருவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ₹134.83 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ₹6,000 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2026–27ஆம் ஆண்டில் 131.36 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை இலக்காக நிர்ணயித்து, சாகுபடி பரப்பை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பம் மற்றும் வேளாண் இயந்திர பயன்பாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வது, குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், பெண் விவசாயிகளுக்கான திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் அமைச்சர் வினோத் விஜய் தெரிவித்தார்.

மேலும், எல் நினோ தாக்கம் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் காலதாமதமின்றி பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இறுதியாக, விவசாயிகள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமானவை படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ