Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 ஜூலை (ஹி.ச.)
நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் குறித்தும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர விவாதம் நடத்த வேண்டும் என்று திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி., விதி 56-ன் கீழ் அவையை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரி நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதேபோல், மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., விதி 267-ன் கீழ் அவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து, நீட் தேர்வை ரத்து செய்வது மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.
நீட் தேர்வு மாணவர்களுக்கு மனஅழுத்தத்தையும் சமத்துவமற்ற கல்விச் சூழலையும் உருவாக்குவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் திமுக, தேர்வை முழுமையாக ரத்து செய்து மாநிலங்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த இரு முக்கிய விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P