ஊழல் வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாடு, 27 ஜூலை (ஹி.ச.) புதிய அரசு மெதுவாக செயல்படுவதாகவும், இதை இளைஞர்கள் கவனித்து வருவதாகவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் பாமக சார்பில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர் கூறியதாவது, திமுகவுக்கு மாற்
அன்புமணி


தமிழ்நாடு, 27 ஜூலை (ஹி.ச.)

புதிய அரசு மெதுவாக செயல்படுவதாகவும், இதை இளைஞர்கள் கவனித்து வருவதாகவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் பாமக சார்பில் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர் கூறியதாவது,

திமுகவுக்கு மாற்றாகவே மக்கள் புதிய அரசை தேர்வு செய்துள்ளதாகக் கூறிய அவர், மக்கள் நம்பிக்கையை இழக்காத வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கனிமவளத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை அரசுக் கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு டிஜிபி (DGP) தரத்தில் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, பணியாளர் நியமன ஊழல் மற்றும் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட புகார்களுக்கு தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க 5 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி தங்களது சொத்து விவரங்களை கட்டாயமாக வெளியிடும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்தார்.

மேலும், தமிழ்நாட்டில் லோக்அயுக்தா அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்களை தண்டிக்கும் அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்து, அந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam