Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 27 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானாவில் மாணவர்களுக்கான கட்டணத் திருப்பிச் செலுத்தும்
(Fee Reimbursement) நிதியை மாநில அரசு வெளியிடாமல் இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் பா.ஜனதா மாநில தலைவர் ராம்சந்தர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளை காங்கிரஸ் அரசு புறக்கணித்து வருகிறது. மாநிலத்தில் ரூ.12 ஆயிரம் கோடி அளவிலான கட்டணத் திருப்பிச் செலுத்தும் நிதியை வழங்காமல் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி, தன்னிடம் உள்ள கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து நெறிமுறையையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார்.
அதேபோன்று, தெலங்கானாவில் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று ரேவந்த் ரெட்டியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காங்கிரஸ் அரசு மெழுகுவர்த்தி பேரணிகள் நடத்துவது நகைப்புக்குரியது. டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமா அவரது தனிப்பட்ட முடிவு என்றும், காங்கிரஸ் போராட்டங்களின் காரணமாகவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறுவது உண்மையல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், 21 வயது ஆனவர்களே எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கும் ராம்சந்தர் ராவ் எதிர்ப்பு தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை மாற்றுவது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
எனவே, இல்லாத அதிகாரங்கள் குறித்து பேசி இளைஞர்களை தவறாக வழிநடத்தக் கூடாது என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA