21 வயதிலேயே எம்.எல்.ஏ. எம்.பி. ஆகும் வாய்ப்பு வேண்டும் - மத்திய அரசுக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை
ஐதராபாத் , 27 ஜூலை (ஹி.ச.) சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 25 ஆண்டுகளில் இருந்து 21 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர
A


ஐதராபாத் , 27 ஜூலை (ஹி.ச.)

சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 25 ஆண்டுகளில் இருந்து 21 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

21 வயதிலேயே இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும், மேயர்களாகவும், பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் அமர முடிகிறது. ஆனால் அதே வயதில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

எனவே தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் இளைஞர்களாக உள்ளனர். குறிப்பாக ஜென்-ஜி தலைமுறையினரின் கருத்துகளும், அவர்களின் பங்களிப்பும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பிரதிபலிக்க வேண்டும். இளைஞர்கள் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அமைச்சர்கள் போன்ற பொறுப்புகளை ஏற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், வரும் ஆகஸ்டு மாதத்தில் தெலங்கானா சட்டசபை மற்றும் சட்ட மேலவையின் சிறப்பு கூட்டங்களை கூட்டி, தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியின்போது வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

அதேபோல் தற்போது தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தெலங்கானா வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.

பிராந்திய வளையச் சாலை, மெட்ரோ ரெயில் மற்றும் மூசி நதி மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்க வேண்டும் என்றும், குஜராத் மாநில வளர்ச்சிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போல் தெலங்கானா வளர்ச்சிக்கும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகளாகவும், மாநிலங்களவை மற்றும் சட்டம் மேலவை தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது 30 ஆண்டுகளாகவும் உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA