Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 27 ஜூலை (ஹி.ச.)
தென்காசி நகரப் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்தவர் சக்தி வீர மணிகண்டன் (வயது 32), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி
(வயது 24) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.
இந்த நிலையில், திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சிறு, சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, உடலுறவு கொள்வதில் அன்னலெட்சுமிக்கு விருப்பம் இல்லாத நிலையில், அவரை சக்தி வீரமணிகண்டன் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் அன்னலெட்சுமி தவறான ஒரு வார்த்தையை கூறி சக்தி வீரமணிகண்டனை திட்டிய நிலையில், ஆவேசமடைந்த சக்தி வீரமணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அன்னலட்சுமியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட 6 இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அன்னலட்சுமி உயிரிழக்கவே, சற்றும் பதட்டம் இல்லாமல் சக்தி வீர மணிகண்டன் கதவை பூட்டிவிட்டு மொட்டை மாடிக்கு சென்று தூங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சக்தி வீரமணிகண்டன் ஆஜராகி தான், தனது மனைவி கொலை செய்து விட்டதாகவும் தான் சரணடைய வந்திருப்பதாகவும் நீதிபதியிடம் தெரிவித்த நிலையில், உடனடியாக நீதிமன்ற பணியாளர்கள் இது தொடர்பாக தென்காசி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தென்காசி போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்று இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த அன்னலட்சுமியை மீட்டு பிரேத சோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளி சக்தி வீரமணிகண்டனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN