Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அடோலின் பிரபா (25), சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறையின் தடய அறிவியல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அவர் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வருகிறார்.
சம்பவத்தன்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரெயிலில் செல்போனில் பேசியபடி பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சானடோரியம் ரெயில் நிலையத்தில் ரெயில் புறப்பட்டபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த அஜெய் (27) என்ற நபர் அவரது செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அடோலின் பிரபா, ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் அவரது இடது முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
உடனடியாக மீட்கப்பட்ட அவர், தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில், செல்போன் பறித்ததாகக் கூறப்படும் அஜெய்யை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மத்திய ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையின்போது, கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ரகளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த அவரது மனைவி, கைக்குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட RPF போலீசார் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பறிக்கப்பட்ட செல்போனை மீட்டு, அஜெய்யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையின் தடய அறிவியல் பிரிவில் பணியாற்றும் பெண் அதிகாரியே செல்போன் பறிப்பு சம்பவத்தில் காயமடைந்தது தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam