சென்னை அருகே வானகரம் - சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை, 27 ஜூலை (ஹி.ச) சென்னை புறநகர் பகுதியில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளான வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் தினமும் அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்
சென்னை அருகே வானகரம் - சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


சென்னை, 27 ஜூலை (ஹி.ச)

சென்னை புறநகர் பகுதியில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளான வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் கட்டண உயர்வால் தினமும் அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆண்டுதோறும் செய்யப்படும் கட்டண மாற்றியமைப்பின் ஒரு பகுதியாக இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் ரூபாய் 5 முதல் 15 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரே நாளில் வந்து செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு முறை கடந்து செல்வதற்கான கட்டணம் ரூபாய் 85 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் திரும்பி வரும் இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 135 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருவள்ளூர், ஆவடி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் வேலைக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் சென்று வரும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளை இந்த கட்டண உயர்வு பெரிதும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமத்தில் இருக்கும் நிலையில், சுங்கக் கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b