உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பைக் ஓட்டி பத்திரமாக மீட்பு
டேராடூன் , 27 ஜூலை (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதி
A


டேராடூன் , 27 ஜூலை (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விகாஸ்நகர் அருகே உள்ள கடாபத்தர் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய சாலையை இருசக்கர வாகனத்தில் ஒருவர் கடக்க முயன்றார்.

அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள், தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலையை கடக்க வேண்டாம் என்று உரக்க எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கையை அவர் அலட்சியப்படுத்தி, பைக்கை வெள்ளநீரில் செலுத்தினார்.

சாலையின் நடுப்பகுதியை அடைந்தபோது, வெள்ளநீரின் சீற்றம் திடீரென அதிகரித்தது. இதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த அவர், கண் இமைக்கும் நேரத்தில் பைக்குடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, உயிரைப் பணயம் வைத்து வெள்ளநீரில் சிக்கியிருந்த அந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவரை கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணர்த்தும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கனமழை நீடித்து வரும் நிலையில், வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் காட்டாறுகளை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், அதிகாரிகளின் எச்சரிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA