Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ₹28 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் 2022 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் மீது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்தார். அதன்பின், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முந்தைய ஆட்சிக்காலத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த இறுதி அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி வழங்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன், வைத்திலிங்கம் தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P