Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசு புதிய உயர்நிலைக் குழுவை அமைத்திருப்பது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தை திசைதிருப்பும் ஏமாற்று வேலை என்று தமிழக அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சோம்நாத், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 101 பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை வழங்கியிருந்தாலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், தற்போது மீண்டும் புதிய குழுவை அமைத்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கையே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமைக்கு (NTA) முழுநேர தலைமை இயக்குநரை நீண்டகாலமாக நியமிக்காத ஒன்றிய அரசே, தற்போது தேர்வு சீர்திருத்தம் குறித்து பேசுவது நம்பகத்தன்மையற்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பல ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இன்றி நம்பகத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சமமான கல்வி வாய்ப்புகள் இல்லாத சூழலில் மாணவர்களை வடிகட்டும் நீட் போன்ற தேர்வு முறை சமூகநீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்வதே மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான நீதி என்றும், மாணவர்–இளைஞர்களின் போராட்டம் அந்த இலக்கை நோக்கியே தொடரும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ