நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 27 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் 2013, 2017, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) பலமுறை எழுதி தேர்ச்சி பெற்ற 21,515 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பண
திருமாவளவன்


தமிழ்நாடு, 27 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் 2013, 2017, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) பலமுறை எழுதி தேர்ச்சி பெற்ற 21,515 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காமல் காத்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 149 மூலம், தகுதித் தேர்வுடன் கூடுதலாக நியமனத் தேர்வு என்ற புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே அந்தத் தேர்வு நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டு 730, 2022ஆம் ஆண்டு 3,987, 2023ஆம் ஆண்டு 6,553 என மொத்தம் 11,270 தொடக்கக் கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டும், அவை இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு 2,768 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு, நியமனத் தேர்வின் மூலம் 20 மாவட்டங்களில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தற்போது தொடக்கக் கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 26,428 உள்ளதாகக் கூறிய அவர், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 21,515 பேரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் தெரிவித்தார்.

13 ஆண்டுகளாக பணி நியமனத்துக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் குடும்பச் சூழல், வாழ்வாதாரம், கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விரைவாக பணி நியமனம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கல்வித் தரத்தை மேம்படுத்த நிரந்தர ஆசிரியர்களை அதிக அளவில் நியமிக்கவும் அவர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam