Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 ஜூலை (ஹி.ச.)
தெலுங்கு நடிகர் ராம் சரண், கோவை கங்கா மருத்துவமனையில் வலது கை மணிக்கட்டு காயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 27-ஆம் தேதி கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம் சரணுக்கு, வலது கை மணிக்கட்டில் நீண்டகாலமாக இருந்து வந்த TFCC (Triangular Fibrocartilage Complex) தொடர்பான சிக்கலுக்காக சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவர்கள் குழு நடத்திய இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் ராம் சரண், மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதால், வரும் வியாழக்கிழமை (ஜூலை 30) காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில வாரங்கள் ஓய்வெடுத்த பின்னர், ராம் சரண் மீண்டும் தனது திரைப்பட பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN