மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 53 ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ
Anbumani Ramadoss


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 53 ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுப்பூதிய பணியாளர்களாகவும், அதன்பின் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவுடன் நிரந்தரப் பணியாளர்களாகவும் மாற்றப்பட வேண்டும் என்றாலும், இந்த 53 பேருக்கு மட்டும் அந்த விதி அமல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், 50 வயதைக் கடந்துள்ள இந்த ஊழியர்களுக்கு வேறு வேலைவாய்ப்பைத் தேடுவது சாத்தியமற்ற சூழல் இருப்பதாகவும், பலமுறை மனு அளித்தும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலால் கடந்த சில ஆண்டுகளில் இருவர் மாரடைப்பால் உயிரிழந்ததுடன், ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றும் 53 தொகுப்பூதிய ஊழியர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்குவதுடன், தொகுப்பூதிய பணியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த நாள் முதல் பணி மூப்பும் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P