Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 28 ஜூலை (ஹி.ச.)
நாட்டில் உள்ள மாநில முதல்-மந்திரிகளின் சொத்து விவரங்கள் மற்றும் அவர்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை, 28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 31 முதல்-மந்திரிகளின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டிலேயே அதிக சொத்து கொண்ட முதல்-மந்திரியாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். தமிழ்நாடு முதல்-மந்திரி மு.க. ஸ்டாலின் ரூ.648 கோடி சொத்துகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.30 கோடிக்கு மேல் இருப்பதாகவும், அதிக சொத்து கொண்ட முதல்-மந்திரிகள் பட்டியலில் அவர் 8-வது இடத்தில் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரேவந்த் ரெட்டிக்கு 80 வழக்குகள்
முதல்-மந்திரிகள் மீது உள்ள குற்ற வழக்குகளை பொறுத்தவரை, தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு எதிராக 80 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக மேற்கு வங்க முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மீது 19 வழக்குகளும் உள்ளன.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீதும் 19 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 31 முதல்-மந்திரிகளில் 14 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உமர் அப்துல்லாவுக்கு குறைந்த சொத்து
குறைந்த சொத்து கொண்ட முதல்-மந்திரியாக ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.55 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக நாட்டில் உள்ள 31 முதல்-மந்திரிகளின் அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.8,660 கோடி என ஏ.டி.ஆர். அறிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA