மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது விபத்து - சகோதரர் உயிரிழப்பு
புதுக்கோட்டை, 28 ஜூலை (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரில் பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில், மாணவியின் சகோதரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம
Accident


புதுக்கோட்டை, 28 ஜூலை (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரில் பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில், மாணவியின் சகோதரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயமடைந்த மாணவி மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

எரிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் (18). அவரது கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றதை முன்னிட்டு, சிட்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்த அவரது சித்தி மகள் அகல்யா (13) அங்கு வந்திருந்தார்.

திருவிழா முடிந்த பின்னர், சிலட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் அகல்யாவை பள்ளியில் கொண்டு விடுமாறு வீரபாண்டியனிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வீரபாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் அகல்யாவை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வீரபாண்டியன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

படுகாயமடைந்த மாணவி அகல்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்..

இந்த விபத்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN