மன்னார் வளைகுடா கரையோரம் பட்டணமருதூரில் 200 ஏக்கரில் பழங்கால சங்கு ஆபரண ஆலை - தொல்லியல்துறை கண்டுபிடிப்பு
தூத்துக்குடி, 28 ஜூலை (ஹி.ச) தூத்துக்குடி மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டியுள்ள பட்டணமருதூர் என்ற கிராமத்தில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ப
மன்னார் வளைகுடா கரையோரம் பட்டணமருதூரில் 200 ஏக்கரில் பழங்கால சங்கு ஆபரண ஆலை - தொல்லியல்துறை  கண்டுபிடிப்பு


தூத்துக்குடி, 28 ஜூலை (ஹி.ச)

தூத்துக்குடி மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டியுள்ள பட்டணமருதூர் என்ற கிராமத்தில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பழங்காலத்தில் சங்குகளைக் கொண்டு ஆபரணங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்ததற்கான தடயங்களை தமிழக தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இப்பகுதியில் முதற்கட்டமாக மூன்று அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் இதுவரை சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பழங்கால தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சங்கு வளையல்களின் உடைந்த பாகங்கள், சங்கு ஆபரணங்கள் செய்வதற்காக வெட்டி எடுக்கப்பட்ட சங்கு கழிவுகள், மணிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான மணிகள் அடங்கும் என தெரியவந்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதி இயற்கையாகவே சங்குகள் அதிக அளவில் கிடைக்கும் இடமாகும். எனவே இங்கு கிடைக்கும் சங்குகளைக் கொண்டு வளையல்கள், பாசி மணிகள் மற்றும் பிற அலங்காரப் பொருட்களை தயாரித்து, பண்டைய தமிழர்கள் உள்நாட்டிலும், கடல் வழி வணிகம் மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழைக்குப் பிறகு மேற்பரப்பில் தொல்பொருட்கள் வெளிப்பட்டதை அடுத்து இந்த இடம் கவனம் பெற்றது.

இந்த கண்டுபிடிப்பு சங்க காலத்திலேயே தமிழகத்தில் தொழில் சார்ந்த நகர நாகரிகமும், தொழிற்சாலை கட்டமைப்பும் சிறப்பாக இருந்ததை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

200 ஏக்கர் பரப்பில் ஒரு தொழிற்பேட்டை போல செயல்பட்டு வந்த இந்த ஆலை, அக்கால மக்களின் கைவினைத் திறனுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் சான்றாக விளங்குகிறது.

தொடர்ந்து அகழாய்வு விரிவுபடுத்தப்படும் போது மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b