மழைக்காலத்தை முன்னிட்டு கூவம் ஆற்றில் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைப் பணிகள் தற்காலிக நிறுத்தம்
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5 ஆயிரத்து 600 கோடியில் நடைபெற்று வரும் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது 22 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கூவம் ஆற்றின் மேல்புறம் 15.5 கி.மீ. தொலைவுக்கு இந்த மேம்பாலம் அமைக
மழைக்காலத்தை முன்னிட்டு கூவம் ஆற்றில் துறைமுக - மதுரவாயல் பறக்கும் சாலைப் பணிகள் தற்காலிக நிறுத்தம்


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5 ஆயிரத்து 600 கோடியில் நடைபெற்று வரும் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது 22 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

கூவம் ஆற்றின் மேல்புறம் 15.5 கி.மீ. தொலைவுக்கு இந்த மேம்பாலம் அமைகிறது. மழை காலங்களில் அதாவது, செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இப்பணிகள் ஆற்றுப்பகுதிகளில் நடைபெறாது. இந்த திட்டம் வருகிற 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.

இந்த நிலையில் இத்திட்டப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கூவம் ஆற்றுப் பகுதிகளில் நடைபெறாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதாலும், பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு கூவம் ஆற்றின் கரையோரமாகவே அமையவுள்ள இரட்டை அடுக்கு பறக்கும் சாலைத் திட்டத்தின் மிக முக்கியமான கட்டமைப்புப் பணிகள் ஆற்றுப் பகுதிக்குள் தான் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் மழைக்காலங்களில் ஆற்றில் பணிகளை மேற்கொள்வது தொழில்நுட்ப ரீதியாக சிரமம் என்பதால், அந்த நான்கு மாத காலத்திற்கு ஆற்றுப்பகுதி சார்ந்த பணிகளை மட்டும் நிறுத்திவைத்துவிட்டு, நிலப்பகுதியில் நடைபெறும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b