Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஜூலை (ஹி.ச.)
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவையின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தை நடத்துவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூலை 27) இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தியபோது, டெல்லி மாணவர் போராட்டம் மீதான போலீஸ் தடிஅடியைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு பகுதியாக அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான கல்வி மற்றும் தேர்வு தொடர்பான இந்த மசோதாவை விவாதிக்க வேண்டியதன் அவசியத்தை சபாநாயகர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்று மசோதா மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதையடுத்து இன்று இந்த திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் இந்த திருத்த மசோதாவில் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b