Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 28 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பண்ணை கறிக்கோழி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த வாரம் வரை பண்ணையில் ஒரு கிலோ கறிக்கோழி 117 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சந்தையில் தேவை சற்று குறைந்துள்ளதை அடுத்து விலையை குறைக்க வளர்ப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று முதல் பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு 110 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்ணை கொள்முதல் விலை குறைந்துள்ளதால் சில்லறை விற்பனை விலையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிலோ 180 முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி, இனி 165 முதல் 175 ரூபாய் வரை விற்பனையாகும் என கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை குறைவு இல்லத்தரசிகள் மற்றும் அசைவ பிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில் தீவன விலை உயர்வு, மின் கட்டணம் மற்றும் பணியாளர்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோழி வளர்ப்பு செலவு அதிகரித்துள்ளதாகவும், எனவே அரசு தீவன விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b