Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிகளின் வசதி மற்றும் அமைதியை உறுதி செய்யும் வகையில், கைபேசி மற்றும் ஸ்பீக்கர் பயன்பாடு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பேருந்துகளில் பயணம் செய்யும் போது கைபேசியில் உரத்த குரலில் பேசுவது, ஸ்பீக்கர் மூலம் பாடல்கள் கேட்பது அல்லது இயர்போன்/ஹெட்ஃபோன் இல்லாமல் காணொளிகள் பார்ப்பது போன்ற செயல்கள் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடல்கள் கேட்கவோ அல்லது காணொளிகள் பார்க்கவோ விரும்பும் பயணிகள், ப்ளூடூத் இயர்போன் அல்லது ஹெட்ஃபோன் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் 24 செ.மீ × 16 செ.மீ அளவிலான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைவரும் Shift Briefing நேரத்தில் இந்த வழிகாட்டுதல்களை பயணிகளிடம் எடுத்துரைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ