Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 28 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தமிழக அரசு 3 மாதங்களுக்கு தடை விதித்துள்ளதால், தென்காசி மாவட்டம் செங்கோட்டை - புளியரை தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை காலத்தை முன்னிட்டும், கனிம வளங்கள் கடத்தலை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஜல்லி, எம்-சாண்ட், செங்கல், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்ற நூற்றுக்கணக்கான லாரிகள் புளியரை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால் செங்கோட்டையில் இருந்து புளியரை வரையிலான சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் லாரிகள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன.
திடீரென விதிக்கப்பட்ட இந்த தடையால் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பல நாட்களாக சாலையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காமல் கேரளாவில் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தடையை தளர்த்தவோ அல்லது ஏற்கனவே அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமாவது அனுமதிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b