Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர் , 28 ஜூலை (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த சுற்றுலாப் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் கடல் மட்டத்தில் இருந்து 12,730 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான ஆண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ந் தேதி தொடங்கியது.
வருகிற ஆகஸ்ட் 28-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த யாத்திரையில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
அண்மையில் பெய்த கனமழையால் ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
பின்னர் நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் யாத்திரை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், அமர்நாத் தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த சுற்றுலாப் பேருந்து இன்று காலை காந்தர்பால் மாவட்டத்தில் சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்ததும் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எப்.), இந்தோ–திபெத்திய எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பி.) மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமர்நாத் தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும், சிறந்த சிகிச்சையையும் வழங்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA