'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான வழக்கு - தணிக்கை வாரியம், தயாரிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, 28 ஜூலை (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ''ஜனநாயகம்'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயருக்கும் கண்ணியத
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 28 ஜூலை (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 'ஜனநாயகம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயருக்கும் கண்ணியத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

மனுவில், திரைப்படம் பாப்பாபட்டி கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், அதனால் பொதுஅமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் தொடர்பாக மறுபரிசீலனை நடைபெறும் வரை திரைப்படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்கவும், தணிக்கைச் சான்றிதழை மறுபரிசீலனை செய்து, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட காட்சிகளை நீக்க உத்தரவிடவும் கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது எதிர்மனுதாரர் தரப்பில், திரைப்படத்தில் 'பாப்பாபட்டி' அல்ல, 'பாப்பம்பட்டி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், திரைப்படம் வெளியாகும் முன்பே காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், தற்போது படம் வெளியான பின்னரும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

விசாரணையின் போது,

சட்டவிரோதமாக வெளியான திரைப்படத்தை பார்த்து எவ்வாறு ஆட்சேபனை தெரிவித்தீர்கள்? இது ஊக்குவிக்கத்தக்கது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னர், வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத் தலைவர் மற்றும் 'ஜனநாயகம்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam