Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட முக்கிய காய்கறிகளின் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தினசரி காய்கறிகள் வரத்து நடைபெறுவது வழக்கம்.
பொதுவாக நாளொன்றுக்கு 1,000 முதல் 1,100 டன் வரை காய்கறிகள் சந்தைக்கு வந்த நிலையில், தற்போது வரத்து 600 முதல் 670 டனாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் அண்டை மாநிலங்களில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஊட்டியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவமழை குறைவாக இருந்ததுடன், வெப்பநிலை உயர்வும் கேரட் விளைச்சலை பெரிதும் பாதித்துள்ளது.
இதன் காரணமாக கோயம்பேடு மொத்த சந்தையில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ₹100-ஐ தாண்டி விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் அதன் விலை ₹120 வரை உயர்ந்துள்ளது.
மேலும், பீன்ஸ் ஒரு கிலோ ₹90, பச்சை மிளகாய் ₹70, இஞ்சி ₹200, பூண்டு ₹250 என விற்பனையாகி வருகிறது.
வழக்கமாக இந்தக் காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் காய்கறி விளைச்சல் அதிகரித்து விலை குறைவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் பாதிப்பு காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam