மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.60 கோடி அறக்கட்டளை சொத்து முறைகேடு - 19 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை, 28 ஜூலை (ஹி.ச.) மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பின்ன
வழக்கு


மதுரை, 28 ஜூலை (ஹி.ச.)

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பத்திரப்பதிவு மற்றும் அடமானம் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

கோவிலின் இணை ஆணையரும் செயல் அலுவலருமான செல்லத்துரை அளித்த புகாரின் பேரில்,

இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 (மோசடி) மற்றும் 120(B) (கூட்டுச் சதி) பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரும் விசாரணைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

1930-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட உயில் சாசனத்தின்படி, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டம், கோவில்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும்.

அந்த உயிலின் நிபந்தனையின்படி,

சொத்தை வாடகைக்கு விட மட்டுமே அனுமதி உண்டு; விற்பனை, அடமானம் அல்லது உரிமை மாற்றம் செய்ய முடியாது.

ஆனால், 2016-ஆம் ஆண்டு கோவில் பெயரில் இருந்த பட்டா நீக்கப்பட்டு, 9 தனிநபர்களின் பெயரில் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், முன்னாள் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கையும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

பின்னர் வருவாய் நிர்வாகம், அந்த பட்டா மாற்றத்தை ரத்து செய்து, சொத்து கோவிலின் அறக்கட்டளைக்கே சொந்தமானது என உறுதி செய்து மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்ற உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நிலுவையில் இருந்து இடைக்காலத் தடையாணையும் அமலில் இருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத் தடையை மறைத்து 2021-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகார ஆவணமும், பின்னர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனிநபர்கள், முன்னாள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சார்பதிவாளர்கள் உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவில் அறக்கட்டளை சொத்தை அபகரிக்க கூட்டுச் சதி நடைபெற்றதா என்பது குறித்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam